கோபம் என்பது மனிதர்களிடம் தோன்றும் கடுமையான உணர்ச்சி ஆகும்.சராசரியாக எல்லா மனிதருக்கும் கோபம் உண்டாகும், கோபப்படாத மனிதரே இந்த உலகில் இருக்க முடியாதாம். ஆனால் அது வெளிப்படும் முறையில் தான் வித்தியாசம் இருக்கிறது. இது சிறிய அளவில் இருந்து அதிகப்படியான கோபம் கொண்டதாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக பற்களை கடிப்பது, அழுவது, கைகளை பிசைந்து கொண்டு இருப்பது, கைகளை ஓங்கி சுவற்றில் குத்துவது, கையில் கிடைத்த பொருட்களை தூக்கி எறிவது, மற்றவர்களை சொற்களால் காயம் செய்வது போன்றவையாகும்.
கோபத்தினால் மன அழுத்தம், ரத்த அழுத்தம், நீரிழிவு, சுவாசக்கோளாறு, மூளை வாதம், தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.
அதிகப்படியான கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் இதயத் துடிப்பு போன்றவை இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும்.
கோபம் அதிகரிப்பதனால் உடலில் அதிக ஹார்மோன்கள் சுரந்து தூக்கத்தின் அளவை குறைக்கும்.
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்
_ திருக்குறள் 303
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்துவிட வேண்டும். தீமையான விளைவுகள் அந்த சினத்தினால் ஏற்படும்.
கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்:
1. சுவாசிப்பதில் கவனம் செலுத்தலாம். உதாரணமாக 1 முதல் 10 வரை மனதில் எண்ணிக்கொண்டே மெதுவாக மூச்சை உள்ளிழுங்கள். பிறகு 1 முதல் 5 வரை எண்ணிக் கொண்டு மூச்சை அடக்க முயற்சி செய்யுங்கள். இறுதியாக 10 முதல் 1 வரை தலைகீழாக எண்ணிக் கொண்டு மூச்சை மெதுவாக வெளிவிடுங்கள். இதனால் கோபம் குறைவதோடு மட்டுமல்லாமல் மனப் பதட்டம் மற்றும் பயமும் குறையும்.
2. நடைபயிற்சி அல்லது மிதிவண்டி பயிற்சி செய்யலாம். இதனால் ரத்த அழுத்தம் சமநிலையில் இருப்பதோடு மட்டுமல்லாமல், கோபத்தின் அளவையும் குறைக்க முடியும்.
3. அதிகம் கோபம் ஏற்படுத்தும் நபர்கள் மற்றும் சூழ்நிலைகளில் நாம் வெளிப்படுத்த நினைக்கும் அனைத்து விஷயங்களையும் ஒரு பேப்பரில் எழுதி முடித்தவுடன் அதை கிழித்து விடுங்கள் அல்லது எரித்து விடுங்கள்.
4. கோபம் வரும்போது உங்கள் சொற்களில் கவனம் தேவை. எனவே அமைதியாக இருங்கள் அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள். கடுமையான சொற்களை உபயோகிக்க வேண்டாம்.
5. விரும்பத்தகாத சூழலில் கோபமான மன நிலையைப் போக்க மனதுக்கு பிடித்தவர்களுடன் பேசலாம் அல்லது நகைச்சுவை மற்றும் பிடித்தமான பாடலை கேட்கலாம்.
6. கோபம் குறைந்ததும் அதற்கான காரணம் என்னவென்று சுய பரிசீலனை செய்து பாருங்கள். உங்கள் மீது தவறு இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள், மாறாக மற்றவர் மீது தவறு இருந்தால் அதை தெளிவாக என்ன நடந்தது என்பதை பொறுமையாக எடுத்து கூறுங்கள்.
7. அமைதியான மனநிலையை பெற ஒருநாளைக்கு 10 நிமிடமாவது தியானம் செய்யுங்கள், இதனால் கோபத்தை கட்டுப்படுத்த இயலும்.
8. கோபம் வரும் தருணத்தில் அதை குறைக்க சிகரெட் மற்றும் மது அருந்துவதை தவிர்த்து, நல்ல உணவுகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது உடல் மற்றும் மனம் இரண்டிற்குமே நல்லது.
9. அதிகப்படியான கோபம், கட்டுப்படுத்த முடியாமல் முரட்டுத்தனமாக செயல்படுவது போன்ற அதீத உணர்ச்சி வெளிப்பாடு இருந்தால், அவசியம் மனநல ஆலோசகரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
10. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள், மற்றவர்களையும் அன்போடு பாருங்கள்.
No comments:
Post a Comment